GULFOOD-2014 DELEGATION TRIPற்கு, ஏற்றுமதி மேம்பாட்டு மைய உறுப்பினர்களை அழைத்துச்செல்வது குறித்து சுமார் 6 மாதங்களுக்கு முன்பே முடிவெடுக்கப்பட்டது. EPCயின் தலைவர் திரு.K.திருப்பதிராஜன் அவர்கள் ஏற்கனவே GULFOOD சென்று வந்ததன் பயனால் இந்த எண்ணத்தை வித்திட்டார்.
ஏற்றுமதி மேம்பாட்டு மையம்(EPC) கடந்த 2010ல் துவக்கப்பட்டு 50க்கும் மேற்பட்ட ஏற்றுமதியாளர்களை உருவாக்கியிருப்பதோடு மேலும் புதிய ஏற்றுமதியாளர்களை உருவாக்கவும் இவர்கள் மேலும் ஏற்றுமதி வணிகம் அதிகம் செய்து பயனடைய வேண்டுமென்ற எண்ணத்தில் இந்த வர்த்தக பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது.
விருதுநகரைச் சார்ந்த பகலம் டிராவல்ஸ் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பயணத்திற்கு சுமார் 56 உறுப்பினர்கள் பதிவு செய்தனர். இந்த பயணக்குழுவின் தலைவராக ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் துணைத் தலைவர் திரு.J.K.முத்து அவர்களும் ஒருங்கிணைப்பாளர்களாக EPCயின் உறுப்பினர்கள் திரு.A.K.S.அண்ணாமலை, S.சாய் சுப்ரமணியம் ஆகியோரும் நியமிக்கப்பட்டார்கள்.
23-02-2014 ஞாயிற்றுக்கிழமை சரியாக பிற்பகல் 2 மணிக்கு விமானநிலையத்தில் கூடிய குழுவினரை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் முதுநிலைத் தலைவர் திரு. S.இரத்தினவேல், தலைவர் திரு.N.ஜெகதீசன், செயலாளர் திரு.J.ராஜ்மோகன் ஆகியோர், குழுவிற்கு தலைமை தாங்கி நடத்திச்செல்லும் திரு.J.K.முத்து அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து பூங்கொத்து வழங்கி குழுவை வழியனுப்பி வைத்தனர்.
மதுரையிலிருந்து MIHIN LANKA விமானம் மூலம் கொழும்பு வழியாக துபாயை சென்றடைந்த வர்த்தகக்குழுவை DUBAI GRAND HOTEL ல் EPCயின் தலைவர் K.திருப்பதி ராஜன் வரவேற்றார். 24.02.2014 காலையில் GULFOOD கண்காட்சி அரங்கை வந்தடைந்து, தொடர்ந்து 25.02.2014-26.02.2014 என இரண்டு நாட்களும் அனைத்து அரங்குகளையும் பார்வையிட்டு தங்கள் தொழில் சார்ந்த தகவல்களை திரட்டி பல வர்த்தக பேரங்களை மேற்கொண்டனர்.
மேலும் 26ம் தேதி, சார்ஜா SAIF ZONEல் அமைந்துள்ள இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பல வகைகளில் பயன்படக்கூடிய நம்நாட்டு அரசு நிறுவனமான FEDERATION OF INDIAN EXPORT ORGANISATION(FIEO) அமைத்துள்ள கட்டமைப்பை பார்வையிட சென்றோம். அங்கு நம்மை வரவேற்று நமக்கு விளக்கம் கொடுப்பதற்காகவே இந்தியாவிலிருந்து அதன் இயக்குனர் திரு.வால்ட்டர் டிசோசா (WALTER DESOUZA) அவர்கள் வருகை தந்திருந்தார்கள்.
அவர்களின் அலுவலகம், கட்டமைப்பு மற்றும் சேவைகள் பற்றி அவரும், மேலாளர் திரு. ஸ்ரீ நிவாசனும் நமது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு விளக்கமாக பதிலளித்தார்கள்.
அதன்படி இந்தியாவில் உள்ள சிறு ஏற்றுமதியாளர்கள் அரபு நாடுகளில் வர்த்தகம் செய்ய நினைத்தால் அவர்கள் தனியாக அலுவலகம், கிடங்குகள் என பெரும் பொருட்செலவில் முதலீடு செய்து அமைக்கத் தேவையில்லை. FIEO அமைப்பு ஏற்படுத்தியிருக்கும் கட்டமைப்பு மற்றும் அலுவலகத்தையே பயன்படுத்தி அவர்கள் மூலமாகவே இறக்குமதி செய்து விநியோகம் செய்ய முடியும். அலுவல்களையும் FIEO அலுவலர்களே கவனிப்பார்கள். இந்திய ஏற்றுமதியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு நமது அரசு, இந்த வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதன் பயனை உணர்ந்து நமது உறுப்பினர் திரு.மனோகரன் FIEO ல் உறுப்பினராகி தனக்கான அலுவலகம் மற்றும் கிடங்கை பதிவு செய்தது சிறப்பம்சமாக அமைந்தது. இதற்கு முன்பு FIEO அமைப்புடன் இணைந்து நமது EPC பல கருத்தரங்குகளை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே அந்த ஒட்டுமொத்த SHARJAH SAIF ZONE ன் இயக்குனர் திரு. THOMAS JOSEPH அவர்கள் இந்தியாவிலிருந்து 56 பேர் வந்திருப்பதை உணர்ந்து எங்களை சந்தித்து மற்ற கட்டமைப்புகளையும் வசதிகளையும் சுற்றி காண்பித்து செயல்முறை படங்களுடன் விளக்கமும் அளித்து தேனீர் விருந்துடன் உபசரித்தார். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பதும், இந்த SAIF ZONE ல் 50 சதவீதம் மேல் இந்திய நிறுவனங்கள் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், தமிழ்நாடு சேம்பர் ஆப் ஃபவுண்டேஷன் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு மையம் சார்பாக அவர்களை பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்தினோம்.
GULFOODல் கலந்து கொண்ட நாடுகள் விபரம்
உலகின் பல்வேறு நாடுகளின் உணவு வகைகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டாலும் சில நாடுகளின் உணவுகள் மிகவும் பிரசித்திபெற்றது.
ஜப்பானிய உணவுகள்
யுனெஸ்கோவால் பாராட்டப்பட்ட ஜப்பானிய உணவு வகைகள் காண்போரின் மனதையும் நாவையும் சூடேற்றியது. சுமார் 18 உணவு தயாரிப்பு நிறுவனங்கள் நல்ல தரமும் சுவையும் நிரம்பிய ஆரோக்கிய உணவுப் பண்டங்களை தமது அரங்கில் இடம்பெற செய்திருந்தது.
உருகுவேயின் உணவுகள்
தரமான சுவையான மாட்டிறைச்சியை விற்பதில் உலகப்புகழ்பெற்ற உருகுவே நாடு சர்வதேச அளவில் ஆறாவது பெரிய ஏற்றுமதியாளர் ஆகும். கன்றுக்குட்டி பிறந்தது முதல் அதன் மேய்ச்சல் தீவனம், புல் வகை என அனைத்து விஷயங்களிலும் தன் கண்காணிப்பை உறுதி செய்துள்ள ஒரே நாடு உருகுவே என்பதால் இந்நாட்டின் 93 % ஏற்றுமதி ஐக்கிய அரபுகளுக்கே செல்கிறது. 2013ம் ஆண்டில் நடந்த ஏற்றுமதி பொருட்களில் உருகுவேயின் ஆலிவ் எண்ணெய்க்கு பல சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளது.
அடுத்ததாக மினரல் வாட்டர் எனப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உருகுவேயின் முக்கிய ஏற்றுமதி ஆகும். இக்குடிநீர் ஜெர்மனி, பிரேசில், அரபு நாடுகள்,பிரான்சு மற்றும் தாய்லாந்திற்கு ஏற்றுமதி ஆகின்றது.
வேல்ஸ் உணவு ஏற்றுமதிக்கு ஊக்கம்
இங்கிலாந்தின் வேல்ஸ் உணவு தயாரிப்புகளும் குடிநீரும் இக்கண்காட்சியில் இடம்பெற்றது. 2014-20ம் ஆண்டிற்குரிய உணவு மற்றும் பருகுநீர் தொழில் செயல்பாட்டுத் திட்டத்தை வேல்ஸ் அரசு வெளியிட்டதைத்தொடர்ந்து இக்கண்காட்சியில் 14 நிறுவனங்கள் தமது விளைப்பொருட்களை காட்சிப்படுத்தின.
அதிக அளவில் பங்கேற்ற அர்ஜெண்டினா நிறுவனங்கள்
சுமார் 50க்கும் அதிகமான நிறுவனங்களில் அர்ஜெண்டினா நாட்டிலிருந்து வந்து பங்கேற்ற. இதனால் அர்ஜெண்டினா அரங்கமே ஒரு மினி கண்காட்சியாக தோன்றியது.
2013 இல் 90 % ஏற்றுமதியை மத்திய கிழக்கு நாடுகளில் நடத்தியதன் மூலமாக அர்ஜெண்டினாவுக்கு 2.2 மில்லியன் டாலர் கிடைத்துள்ளது. 39 நிறுவனங்கள் இக்கண்காட்சி முடிந்ததும் கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுடன் வர்த்தக சந்திப்புக்களை ஏற்பாடு செய்திருந்தன.
இந்தியாவின் பங்கு
சர்வதேச அளவில் பொருளாதார சரிவும் மந்தநிலையும் ஏற்பட்டுள்ள இந்த காலகட்டத்தில் இந்தியாவின் நறுமணப்பொருட்களின் ஏற்றுமதி(2012-13) விண்ணைத்தொட்டுள்ளது. முதன்முறையாக சீரகம், சோம்பு,மல்லி,புதினா,பூண்டு போன்ற அஞ்சரைப்பெட்டி சரக்குகள் 22 சதவீதம் உயர்ந்து பத்தாயிரம் கோடியை கடந்துவிட்டது.
மிளகாய், பெரிய ஏலக்காய்,மல்லி, சீரகம், சோம்பு(பெருஞ்சீரகம்), வெந்தயம், கடுகு, ஜாதிக்காய்,பெருங்காயம்,புளி, சோம்பு போன்றவற்றின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
பரிசுகள்
இக்கண்காட்சியில் இடம்பெற்றிருந்த சிறந்த உணவுகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. துபாயில் உலக வர்த்தக மையம் நடத்திய இவ்விழாவில் புதிய உணவு முத்திரை, புதிய தொழில் முத்திரை, சிறந்த புதிய ஹலால் உணவு, சிறந்த சுற்றுச்சூழல் ஆதரவு உணவு, சிறந்த தொழில் நிலை என்று பல வகைகளின் கீழ் பரிசுகள் அறிவிக்கப்பட்டன.
இவ்உணவுத்திருவிழாவின் தாரக மந்திரமாக புதுமை அறிவிக்கப்பட்டிருந்தது. ஜான் ஹோல்ட் ஃபுட்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் அலென் தோங் சாதனை விருதை பெற்றார்.
GULFOODல் கலந்து கொண்ட நமது உறுப்பினர்களின் அனுபவங்கள்
ANZELINA COSMOS நிறுவனத்தின் உரிமையாளரும் EPC உறுப்பினருமான திரு.T.L. துக்காரம் அவர்கள் கூறியதாவது, இக்கண்காட்சியில் 4500 ஸ்டால்கள் இடம்பெற்றிருந்தது. உலகின் பல்வேறு நாடுளில் உள்ள வர்த்தகர்கள் தங்களுடைய உணவுப்பொருட்களை காட்சிப்படுத்தியிருந்தனர். உதாரணமாக, பாகிஸ்தான், கொரியா, ஈரான், ஈராக், ஆஸ்திரிலேயா,ஆப்கானிஸ்தான், சீனா, தென் அமெரிக்க நாடுகளான அர்ஜெண்டினா, கொலம்பியா என அனைத்து கண்டங்களிலும் உள்ள நாடுகளின் வர்த்தகர்கள் தங்களின் பொருட்களை காட்சிப்படுத்தும் விதத்தில் ஸ்டால்களை அமைத்திருந்தனர்.
இந்த 4500 ஸ்டால்களையும் காண, எனக்கு நேரமே போதவில்லை, இருப்பினும் பெரும்பான்மையான அளவில் கண்டு, அதன் விபரங்களையும் அங்குள்ள பொருட்களை பற்றியும் தெரிந்துகொண்டதாக கூறினார்.
புதிய தொழில்நுட்பம் தேவை
VINDINI VYSAGE நிறுவனத்தின் உரிமையாளரும் EPC உறுப்பினருமான M.S. மணிவண்ணன் அவர்கள் கூறியதாவது, இந்தியாவில் உள்ள வளங்களை பயன்படுத்தி புதிய தொழில்நுட்பத்துடன் செய்ய வேண்டும் என்று கூறிய இவர், ஜப்பானியர்கள் கோலிசோடாவை புதிய டெக்னாலஜியுடன் காட்டியிருந்ததாகவும் குறிப்பிட்டார்.
துருக்கி, ஹாலந்து போன்ற நாடுகள் காட்சிப்படுத்தியிருந்த விதம் தனக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும் குறிப்பாக துருக்கி, ஒவ்வொரு காய்கறிகளையும் பலவிதமாக காட்சிப்படுத்தியதாகவும் கூறினார்.
நம் நாட்டு உணவுப்பொருட்கள், துபாய்க்கு தேவை
SUNMOON SAI EXIM நிறுவனத்தின் உரிமையாளரும் EPC உறுப்பினருமான E.V. தண்டபாணி அவர்கள் கூறியதாவது, துபாயை பொறுத்தவரைக்கும் அங்கு ஒட்டகம், பேரிச்சம் பழம், எண்ணெய்தான்! மற்றபடி அங்கு, மக்களுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் உலக நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. அதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
காய்கறிகள், அரிசி, மசாலாப்பொருட்கள் போன்றவை நம் நாட்டிலிருந்து தான் பெரும்பாலும் ஏற்றுமதியாகிறது. நம் நாட்டின் பாரம்பரிய பழமையான உணவுப் பொருட்களான எள், அங்குள்ள மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றிருப்பதாகவும் தோசை, உருளைக்கிழங்கு போன்றவற்றை துபாய் மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுவதாகவும் தெரிவித்தார்.
உலகமே துபாய் ல தான் இருக்கு
RAMBALA COIR PRODUCTS நிறுவனத்தின் உரிமையாளரும் EPC உறுப்பினருமான திரு. N.ராமநாதன் அவர்கள் கூறியதாவது, துபாய் என்றால் வெறும் பாலைவனம், ஒட்டகம் என்று தான் நினைத்திருந்தோம். ஆனால் அங்கு போனவுடன் தான் தெரிந்தது, “உலகமே துபாயில் தான் இருக்கிறது” என்றார். மேலும் 20 சதவீதம் மக்கள் தான் துபாய் பிரஜைகள், மீதம் 80 சதவீதம் பேர் வெளிநாட்டினர்கள்!
துபாய்ற்கு என்னென்ன பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது, துபாயிலிருந்து வெளிநாடுகளுக்கு என்னென்ன பொருட்கள் இறக்குமதியாகிறது என அனைத்து விஷயங்களையும் தெரிந்துகொண்டோம் எனக் கூறினார்.
SURYA IMPEX நிறுவனத்தின் உரிமையாளரும் ஒருங்கிணைப்பாளருமான திரு.S. சாய் சுப்ரமணியம் அவர்கள் கூறியதாவது, இந்த துபாய் உணவுத்தொழில் வர்த்தக கண்காட்சியை பொறுத்தவரைக்கும் ஒரு GLOBAL BUSINESS MAN ஐ எப்படி சந்திப்பது? நம்முடைய அறிமுகத்தை எப்படி அவரிடம் கொடுப்பது, அவரை எவ்வாறு அணுகுவது போன்ற BUSINESS COMMUNICATIONS அனைத்தையும் எங்களுக்கு கற்றுக்கொடுத்த தலைவர் K.திருப்பதி ராஜன் அவர்களுக்கும் துணைத்தலைவர் J.K.முத்து அவர்களுக்கும் நன்றிகள் என்று மகிழ்ச்சி பொங்க கூறினார்.
ஐரோப்பிய காய்கறிகளை விட இந்திய காய்கறிகள் ரொம்ப டேஸ்ட் ! துபாய் மக்கள் புகழாரம்
AJAY EXIM நிறுவனத்தின் உரிமையாளரும் ஒருங்கிணைப்பாளருமான திரு. A.K.S. அண்ணாமலை அவர்கள் கூறியதாவது, ஐரோப்பிய காய்கறிகளை விட இந்திய காய்கறிகள் ரொம்ப சுவையாக இருப்பதாகவும் விலை குறைவாக இருப்பதாகவும் துபாயில் உள்ளவர்கள் கூறுவதாகவும் மேலும் மிக அதிகமான ரெஸ்டாரண்டுகள் துபாயில் காணப்படுவதாகவும் எனவே FOOD MARKET, துபாயில் அதிக மதிப்பு மிக்க ஒன்று என்றார்.
ஏற்றுமதி செய்யும் போது 6 மாதம் கவனிக்க வேண்டியவற்றை ஒரே நாளில் தனக்கு சொல்லிக்கொடுத்ததாகவும் மேலும் BUYER ஐ அணுகும் முறைகள், PACKAGING முறைகளை இந்த GULFOOD பயணத்தில் தான் கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
ரூ.5000 கோடி அளவிற்கு வர்த்தகம்
RAJ EXIM நிர்வாக இயக்குனரும் EPCயின் தலைவருமான திரு.K.திருப்பதி ராஜன் அவர்கள் கூறியதாவது, உணவு மார்க்கெட்டில் இருக்கக்கூடிய வர்த்தகர்கள் உலக உணவுசந்தையில் நடந்துகொண்டிருப்பதை அறிவதற்கு இந்த GULFOOD ஒரு வாய்ப்பாக இருந்தது. எங்கள் குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் நல்ல அனுபவங்கள், தொடர்புகள்(CONTACTS), வேறுபாடுகள், விலை நிலவரங்கள் என பல தகவல்களை தெரிந்துகொள்ள முடிந்தது.
இந்த கண்காட்சியில் மொத்தம் ரூ.5000 கோடி அளவிற்கு வர்த்தகம் ஆகியுள்ளது என GULFOOD ஐ நடத்திய ஏற்பாட்டாளர்கள் தெரிவிப்பதாக கூறினார்.
WE NEVER IMPORT ANYTHING FROM INDIA
KAMALAM GROUPன் நிர்வாக இயக்குனரும் ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் துணைத் தலைவரும் வர்த்தகபயணக்குழுவின் தலைவருமான திரு.J.K.முத்து அவர்கள் கூறியதாவது, நாம் என்னவெல்லாம் சாப்பிடமுடியுமோ அனைத்து வகையான உணவுப் பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
விதை, கிழங்கு, தண்டு, இலை, பூ, காய், கனி, பழச்சாறு, தானியம், நீர், பதப்படுத்தப்பட்ட உணவுகள், கடல் உணவுகள், மாமிசம் இவைதவிர வருத்தது, பொறித்தது, அவித்தது என பலதரப்பட்ட உணவுகளும் அதற்கு தேவையான PACKAGING பொருட்களையும் உலகின் பல நாடுகள் இங்கே காட்சிபடுத்தியிருந்தன.
சில அமெரிக்க-சீன நிறுவனங்கள் ஒரு அதிர்ச்சியூட்டும் கருத்தை உணர்வுப்பூர்வமாக தெரிவித்தன. அது, “WE NEVER IMPORT ANYTHING FROM INDIA” இது நமது உறுப்பினர்களுக்கு அதிர்ச்சியளிப்பதாக இருந்தாலும் அந்த நிறுவனங்கள் இறக்குமதிக்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக உணர்வுப்பூர்வமாக பயிற்றுவிக்கப்பட்டிருப்பதும் நமக்கெல்லாம் ஒரு பாடமாக அமைந்தது. இதன் மூலம் இந்தியர்களாகிய நாமும் முடிந்தவரை இறக்குமதியை குறைக்கவும் அப்பொருட்களை நுகராமல் இருக்கவும் மேலும் ஏற்றுமதியை அதிகரிக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு EPCக்கு உள்ளதை உணர்கிறோம்.
உலகில் சில நாடுகளில் அவர்களுக்கு தேவையான பொருட்கள் அவர்களுடைய நாடுகளில் விளைவதில்லை; அவர்களால் அதை உற்பத்தி செய்யவும் முடிவதில்லை. எனினும் அவர்களுக்கு அப்பொருள் தேவையிருந்தாலும் அத்தியாவசியமற்றதாக இருந்தால் வெளிநாடுகளிலிருந்து அவற்றை இறக்குமதி செய்வதை தவிர்க்கிறார்கள்.
ஆனால், நாம் நுகரக்கூடிய பல அயல்நாட்டுப் பொருட்களை விட ஆரோக்கியமான பொருட்கள் இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கும் விளைவிப்பதற்கும் வாய்ப்புகள் இருந்தும் இறக்குமதி செய்துகொண்டிருக்கிறோம். இந்த போக்கை மாற்ற வேண்டி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
வெறும் பாலைவனத்தால் சூழப்பட்டும் இயற்கை வளமில்லாத துபாய், ஏற்றுமதி-இறக்குமதி வணிகர்கள் கூடும் உலகின் மிகப்பெரிய உணவுக்கண்காட்சியை நடத்துகிறது. ஆனால், நம்மிடம் அனைத்து இயற்கை வளமிருந்தும் நம்மால் ஏன் இதுபோன்ற வர்த்தக மேம்பாட்டு நிகழ்வுகளை நடத்த முடியாது?
எனவே வரும் காலங்களில் தென் தமிழகத்தை ஒருங்கிணைக்கும் மதுரைக்கு, மாமதுரை என்று அர்த்தம் கொண்டு MAAMADURAI INTERNATIONAL TRADE FAIR என்ற சர்வதேச வர்த்தக கண்காட்சியையும் MAAMADURAI INTERNATIONAL BUYER-SELLER MEET என்ற ஏற்றுமதியாளர்-இறக்குமதியாளர் சந்திப்பு போன்றவற்றையும் வருடந்தோறும் மதுரையில் நடத்த திட்டமிட்டிருக்கிறோம்.
மேலும், வருங்காலங்களிலும் EPC சார்பாக 3 மாதத்திற்கு ஒருமுறை வெவ்வேறு நாடுகளுக்கு உறுப்பினர்களுடன் வர்த்தகப் பயணம் மேற்கொள்ளவும் திட்டமிட்டு வருகிறோம்.
பல நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள், அவர்கள் அந்நாட்டின் பெயரை BRANDING செய்திருந்ததை காண முடிந்தது. உதாரணமாக ! பிரேசில் நாட்டினர் “ONE COUNTRY MANY FLAVOURS” என்று BRANDING செய்திருந்தார்கள். அந்த வகையில் நாமும் INDIA’S MAAMADURAI என்று BRANDING செய்ய ஆலோசிக்கிறோம்.
இதற்கெல்லாம் தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்கத்தின் முதுநிலைத்தலைவர் மற்றும் தலைவர்களின் அனுமதிக்காக காத்திருக்கிறோம் என்றார்.