ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் 3வது ஆண்டுவிழா 23-10-2013 புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெற்றது.
இந்த விழாவில் மையத்தின் தலைவர் திரு. K. திருப்பதி ராஜன் அவர்கள் தனது வரவேற்புரையில், ஒவ்வொரு ஆண்டுவிழாவிலும் ஏற்றுமதி செய்யும் உறுப்பினர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கிறோம். இது அவர்களுக்கு ஊக்கத்தை அளிக்கிறது. மென்மேலும் அவர்கள் தொடர்ந்து ஏற்றுமதி செய்வதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மையத்தின் மூலம் வழங்கி வருகிறோம். ஒவ்வொரு மாதமும் ஏற்றுமதி செய்வதற்கு தேவையான விபரங்களை ஒவ்வொரு தலைப்பில் கற்பிக்கிறோம்.
உதாரணமாக! ஏற்றுமதி செய்வதற்கு தேவையான அடிப்படை பயிற்சி, உரிமம் பெறுதல், ஆவணங்கள் தயாரிக்கும் பயிற்சி, விலை நிர்ணம் செய்யும் முறை, பொருட்களை தேர்ந்தெடுத்தல், சுங்கவரி இலாகா ஆவணங்களை சமர்பிக்கும் முகவர்கள் பற்றிய விபரங்கள், பயிற்சி வகுப்புகளில் உறுப்பினர்களுடன் கலந்துரையாடல், உறுப்பினர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிப்பது, வெளிநாட்டு வர்த்தக கண்காட்சிகளுக்கு அழைத்து செல்வது, மின்னணு வணிகம் பற்றிய வகுப்புகள், ஏற்றுமதியாளர்களுக்கு அரசின் சலுகைகள், ஊக்கத்தொகை பெறும் வழிமுறைகள் குறித்து பயிற்சி நடைபெறும் என்று தன் வரவேற்புரையில் கூறினார்.
ஆண்டு விழாவின் அடுத்த நிகழ்வாக Epc-யின் துணைத் தலைவர் திரு J.K முத்து அவர்கள் இயக்கி தயாரித்த “சிறு வியாபாரி சின்னச்சாமி ஏற்றுமதியாளரான கதை” என்ற மேடை நாடகம்(Role Play) நடைபெற்றது. இதில் ஏற்றுமதியாளர், இறக்குமதியாளர், பொருள்சப்ளையர், வங்கிமேலாளர், சரக்குபோக்குவரத்து ஒருக்கிணைப்பாளர் போன்றோர்கள் கதாப் பாத்திரங்களாக சித்தரிக்கப்பட்டு மிக நேர்த்தியாக புதிய உறுப்பினர்களும் ஏற்றுமதி பற்றி புரிந்து கொள்ளும் வகையில் மேடை நாடகம் சிறப்பாக நடத்தப்பட்டது.
சிறப்பு விருந்தினர் திரு.A.சக்திவேல் அவர்கள் சிறப்புரையாற்றுகையில், இங்கு EPC மையக்குழு உறுப்பினர்கள் நடத்திய மேடை நாடகம் மிக அருமையாகவும் எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக இருந்தது. அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
சிறப்பு விருந்தினரும் பின்னலாடை ஏற்றுமதி வளர்ச்சிக் கழகத்தின் தலைவரும், இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பின் FIEO முன்னாள் தலைவருமான பத்மஸ்ரீ.டாக்டர் A.சக்திவேல் அவர்கள் தன் சிறப்புரையில், நான் விவசாயக் குடும்பத்தில் பிறந்து, பின்னலாடை ஏற்றுமதி வளர்ச்சிக் கழகத்தின் தலைவராக பதவி உயர்வு பெற்று வந்துள்ளேன். ஆரம்பத்தில் இந்த தொழிலை தொடங்கி நடத்தி வரும் வேளையில், திருப்பூரில் உள்ள பின்னலாடை உற்பத்தியாளர்களை ஒன்று சேர்த்து ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தினேன்.
அந்த கூட்டமைப்பின் இலக்காக ஒரு வருடத்திற்கு 1000 கோடி மதிப்புள்ள பின்னலாடைகளை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற இலக்கை ஏற்படுத்தி, அதை நிறைவேற்றினோம். அடுத்ததாக வருடத்திற்கு 5000 கோடி மதிப்புள்ள பின்னலாடைகளை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற இலக்கினை ஏற்படுத்தி அதையும் நிறைவேற்றினோம். தற்போது 15,000 கோடி மதிப்புள்ள பின்னலாடைகளை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம் அதை விரைவில் நிறைவேற்றிவிடுவோம். மேலும் திருப்பூருக்கு அடுத்தபடியாக மதுரையும் தொழில்நகரமாக மாறிவருகிறது. நூல் உற்பத்தியில் சிறந்த நகரமாக மதுரை உள்ளது. இங்குள்ள தியாகராஜர் மில்நிறுவனத்தில் சிறந்த நூல் உற்பத்தி செய்கிறார்கள். மேலும் மதுரையிலிருந்து அதிக அளவில் நூல்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மதுரை மக்கள் மிகவும் புத்திசாலிகள், அதனால் இங்கு ஏற்றுமதி மண்டலம் அமைத்து Cluster method குழு அமைப்பு முறையில் ஏற்றுமதி செய்யலாம். AEPCயிலிருந்து மதுரையில் உள்ள உறங்கான்பட்டியில் ஒரு பின்னலாடை உற்பத்தி மையம் ஒன்றை தொடங்கினோம். ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் தலைவர், துணைத்தலைவர், மற்றும் உறுப்பினர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். மதுரையை ஏற்றுமதி மையமாக Export hub உருவாக்க வேண்டும்.
EPC யிலிருந்து மதுரைக்கு எவ்வளவு திட்டங்கள் வேண்டுமோ அனைத்தையும்
செய்து தருகிறேன். இங்குள்ள உறுப்பினர்களில் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்பவர்களுக்கு திருப்பூரில் உங்களுக்கு என்ன உதவி வேண்டுமோ அவற்றை செய்து தர தயாராக உள்ளேன்.
அடுத்ததாக நமதுநாடு ஏற்றுமதியில் மிக வேகமாக முன்னேற்றம் அடைந்து வருகிறது. இதற்கு நம் அனைவரின் பங்களிப்பும் மிக அவசியம். பங்களிப்பு என்றவுடன் எனக்கு ஒரு விஷயம் நினைவிற்கு வருகிறது. முதுநிலைத்தலைவர் திரு.S.இரத்தினவேல் அவர்களின் புத்திக்கூர்மை, அணுகுமுறை, பொறுமை ஆகியவை ஒன்று சேர்ந்து இந்த தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தையும் அதன் உறுப்பினர்களையும் சிறப்பாக வழிநடத்துகிறீர்கள். அதற்கு தேவையான அனைத்து தலைமைப் பண்புகளும் உங்களுக்கு உள்ளது. அரசாங்கத்தில் உள்ள அதிகாரிகளிடமும் துறை அமைச்சர்களிடமும் சிறப்பான முறையில் அணுகி, விற்பனை வரி, வருமான வரி, சுங்கவரி தொடர்பான விதிமுறை மாற்றம், புதிய கொள்கை வரி தொடர்பான ஆலோசனைகள், வர்த்தகர்கள் நலன் ஆகியவைகளை மையமாக வைத்து சிறப்பாக பணியாற்றி வருகிறீர்கள். உங்களைப்போல நானும் திருப்பூர் மற்றும் இந்திய பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கு சேவை செய்கிறேன். மதுரையில் உள்ள வர்த்தக சங்க உறுப்பினர்கள் திருப்பூர் வந்தால் தன்னை சந்திக்குமாறும் உதவிகள் செய்வதாகவும் உறுதியளித்தார்.
அடுத்ததாக நமது முதுநிலைத் தலைவர் திரு.S.இரத்தினவேல் அவர்கள் பேசுகையில், வர்த்தக சங்கத்தின் மூலம் மதுரையை சர்வதேச நகரங்களில் ஒன்றாக மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம். எங்களின் சீரிய முயற்சியால் மதுரை விமான நிலையம் பன்னாட்டு விமான நிலையமாக மேம்படுத்தப்பட்டது. மதுரையிலிருந்து கொழும்புவிற்கு நேரடி விமான சேவை, மிஹின் லங்கா என்ற இலங்கை அரசின் விமானப்போக்குவரத்து மூலம் செல்லலாம். கொழும்புவிற்கு சென்று விட்டால் அங்கிருந்து உலகில் அனைத்து நகரங்களுக்கும் விமான சேவை உள்ளது. அதை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் நவம்பர் மாதம் 22ம் தேதி மதுரையில் இருந்து துபாய் நாட்டிற்கு நேரடி விமான சேவை துவங்க உள்ளது. முன்னதாக, இதற்கு என் தலைமையில் ஒரு குழுவாக சென்று விமான போக்குவரத்து அமைச்சரை சந்தித்தோம். அதன் பயனாக மதுரை To துபாய் விமானசேவை துவக்கப்பட உள்ளது என்பதை குறிப்பிட்டார். வரும் காலங்களில் மதுரையிலிருந்து சிங்கப்பூர், மலேசியா, மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு விமான சேவை தொடங்குவதற்கு ஏற்கனவே அதற்கான அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். விரைவில் இந்த நாடுகளுக்கும் நீங்கள் இந்த விமான சேவையை பயன்படுத்தலாம். தொடர்ந்து வர்த்தக அமைப்புகள் மாநில, மத்திய அரசுகளின் அதிகாரிகளை சந்தித்து கொண்டுதான் இருக்கிறோம் மதுரையின் வர்த்தக வளர்ச்சிக்காக!
அடுத்த நிகழ்வாக ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தில் உள்ள ஏற்றுமதியாளர்களுக்கு நமது சிறப்பு விருந்தினர் DR.A.சக்திவேல் அவர்கள் விருதினை வழங்கி கௌரவம் செய்தார்.
இறுதியாக நன்றியுரை கூறிய நமது EPC துணைத் தலைவர் திரு. j.k.முத்து அவர்கள், இந்த ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட AEPC யின் தலைவர் DR.A. சக்திவேல் அவர்களுக்கும் பல்வேறு பணிகளுக்கிடையே இங்கு வந்து எங்களையும் உறுப்பினர்களையும் வாழ்த்திய நமது முதுநிலைத் தலைவர் திரு.S.இரத்தினவேல் அவர்களுக்கும், மற்றும் Yes அமைப்பின் உறுப்பினர்களுக்கும் மற்ற விருந்தினர்களுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறினார்.